Saturday 28 June 2014

புத்தகம்

                          நட்பு என்பது ஒரு புத்தகம் அதில் சின்ன சின்ன சுகங்கள் வார்த்தைகளால் நிறைந்து கிடக்கிறது. சின்னதாய் ஒரு காத்திருப்பு சின்னதாய் ஒரு கோபம் சின்னதாய் ஒரு சண்டை சின்னதாய் ஒரு கெஞ்சல் சின்னதாய் ஒரு கொஞ்சல் சின்னதாய் ஒரு சந்திப்பு சின்னதாய் ஒரு பிரிவு சின்னதாய் ஒரு ஏக்கம் சின்னதாய் ஒரு வலி சின்னதாய் ஒரு பரிவு இவை அத்தனையும் நிறைந்ததுதான் நட்பு.

                         தனது ஒவ்வொரு பக்கத்திலும் நம்மை சிரிக்க வைக்க, சிந்திக்க வைக்க, அழவைக்க, ஆறுதல் சொல்ல, விட்டுக்கொடுக்க, சகித்துக்கொள்ள கவலைப்படும் நேரங்களிலும் கஷ்டப்படும் நேரங்களிலும் தன்னம்பிக்கை கொடுக்க வைக்கிறது. அந்த புத்தகத்தை பொறுமையாக படிப்பவர்கள் தூசிபடாமல், பூச்சு திண்ணாமல் பத்திரப்படுத்தி வைப்பவர்களிடம் மட்டுமே அது நீண்ட நாட்களாக அவர்களோடு இருக்கிறது. அவசரகாரர்கள், பொறுமை இழந்தவர்கள் கைகளில் அந்த புத்தகம் இருந்தால் அது கிழிக்கப்பட்டு அதன் ஏடுகள் காற்றில் பறந்து விடுகிறது.

                         நல்ல புத்தகம் நல்ல நண்பன் அதன் பக்கங்கள் நமக்கு காட்டும் சொர்க்கங்கள் ஆனால் அந்த நல்ல புத்தகத்தை நாம் தேடவேண்டும் தேடி படிக்க வேண்டும் கிடைத்து விட்டால் அதை பத்திரமாக பாதுகாக்க் வேண்டும். கிடைத்தும் தொலைத்து விட்டால் நஷ்டம் புத்தகத்திற்கு அல்ல நமக்குதான் அது வேறொரு கைகளில் கிடைத்துவிட்டால் அது மீண்டும் கிடைப்பது கஷ்டம்.

Tuesday 17 June 2014

ஞானோதயம் சிறுகதை

             

              காலை 8 மணி கணேஷ் படுக்கையைவிட்டு எழுந்து கைகளை மேலே தூக்கி சோம்பல் முறத்தப்படி கொல்லைப்புறம் சென்று முகம் கழுவி பல் விளக்கிவிட்டு வந்து திண்ணையில் அமர்ந்தான்.

               கணேஷின் தாய் கமலம் டம்ளரில் காபியை மகனிடம் கொடுத்தப்படி "ஏம்பா... நீ எங்கேயாவது வெளியில போற வேலை இருக்கா" என்றாள் மெதுவாக

            "ஏன் கேக்குற..." என்றான் சற்று எரிச்சலுடன்.

            "இல்ல கடையில சாமான் கொஞ்சம்தான் இருக்கு டவுனுக்கு போய் வாங்கிட்டு வரணும் நீ கொஞ்ச நேரம் கடையை திறந்து பார்த்துகிட்டா" என்று சொல்லி முடிக்கும்முன்.

             கணேஷ் "இதபாரும்மா... இந்த பொட்டி கடையில உக்காறா வைக்கவா என்னை இவ்வளவு படிக்க வைச்ச... என்னால முடியாது நீ போறதுன்ன கடையை பூட்டிட்டு போ" என்றான் சற்றே உரத்த குரலில். கமலம் ஏதோ சொல்ல நினைத்தவளாய் வாய்திறந்த போது

               "அம்மா... அம்மா..." என்று வெளியே குரல் கேட்கவே எட்டிபார்த்தாள் அங்கே ஒரு இளைஞன் நின்றுகொண்டிருந்தான். "என்னப்பா... என்ன வேணும் உனக்கு"

              "நான் இன்ஸிடெண்ட் காபி பவுடர் விற்பனை செய்யுறேன்... ஒரு பாக்கெட்டின் விலை 20 ரூபா வாங்குறீங்களா..? ரொம்ப நல்லா இருக்கும் ஒரு கப் வெந்நீரில் ஒரு ஸ்பூன் பவுடர் கொட்டி கலக்கினால் போதும் காபி ரெடி சாப்பிட்டு பாக்குறீங்களா..." என்றவன் பிளாஸ்கில் கொண்டுவந்த வெந்நீரை ஊற்றி அதில் பவுடரை கலந்து கொடுத்தான்.

              வாங்கி குடித்தவள் காபி நல்ல மணத்துடன் நன்றாக இருக்கவே "ஒரு இரண்டு பாக்கெட் கொடுப்பா" என்றவள் ஐம்பது ரூபாய் பணத்தையும் கொடுத்தாள் பணத்தை வாங்கியவன் மீதி பணத்தை கொடுப்பதற்கு ஷர்ட் பாக்கெட்டில் இருந்து மணிபர்சை எடுத்தபோது அதிலிருந்து ஐடென்டிகார்டு நழுவி அங்கே விழுந்தது. வெளியே வந்தகணேஷ் கண்ணில் பட்டது குனிந்து எடுத்தவனின் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது. அதில் ஆர்.சரவணன் எம்.எஸ்சி., மேத்ஸ் பாரதிதாசன் யுனிவர்சிட்டி என்றிருந்தது அதே ஆச்சரியத்தார் சார்.. சார்.. ஒரு நிமிஷம் நில்லுங்க என்றான். தன்னை யாரோ கூப்பிடுவதை உணர்ந்த அந்த இளைஞன் நின்று திரும்பி பார்த்தான்.

Saturday 14 June 2014

கத்தி

நாம் பேசுகின்ற வார்த்தை
கத்தி போன்றது யாரையும்
காயப்படுத்தாமல் லாவகமாக
அதை சுழற்ற வேண்டும்
ஏனெனில் அது நம்
பக்கமும் திரும்பும்

Friday 6 June 2014

என் சுவாச காற்று

நான் போகும் இடத்திற்கு
நீ வந்தாய்
நீ போகும் இடத்திற்கு
நான் வந்தேன்..!

தனித்திருக்கையில்
உன்னருகே நானிருந்தேன்
என்னருகே நீயிருந்தாய்..!

எனக்கு ஒன்று விளங்கவில்லை
எந்த திசையில் பயணித்தாலும்
அந்த பயணம் உன்னை
சுற்றியே பயணிக்கிறது..!

உனக்குத் தெரியுமா?
நீ செல்லமாய் பேசும்போதும்
திட்டும்போதும் நான்
ரசித்து சிரிக்கிறேன்..!

நான் வேற ஒருவருடன்
நட்புக் கொண்டால்
உனக்கு பிடிக்காது அதனால்
என்னை வெறுப்பேற்றுவதற்காக
நீயும் வேற ஒருவருடன்
நெருக்கமாக இருப்பதாக
அடிக்கடி காட்டிக்கொள்வாய்
அதையும் ரசிக்கவே செய்கிறேன்..!

நான் வரையும் ஓவியம்
எல்லோருக்கும் பிடிக்கும் ஆனால்
உன்னை வரையும் போதுதான்
அந்த ஓவியமே எனக்கு பிடிக்கிறது..!

உன்னை நினைக்க
உன் நினைவுகளை தவிர
வேறொன்றும் என்னிடமில்லை
நான் ஒன்று உன்னிடம்
கேட்கிறேன் தருவாயா..?

என் துன்பத்தின் போது
கண்ணீர் துடைக்க நீ வேண்டும்..!
என் மகிழ்ச்சியின் போது
மனம் மகிழ நீ வேண்டும்..!
நானாக நானிருக்க
நட்பே நீ எப்போதும்
எனக்கு வேண்டும்..!

Thursday 5 June 2014

தஞ்சாவூர் மாவட்டத்தின் பெருமைகள்



தஞ்சை என்பதற்கு வயல்கள் நிறைந்த பகுதி என்று பொருள்
தஞ்சையை பற்றி ஒரு புராணக் கதை உண்டு. முற்காலத்தில் தஞ்சன் என்னும் அரக்கன் இவ்விடத்தில் மக்களைத் துன்புறுத்தி
வந்தான் மக்களை காக்க அவனை சிவபெருமான் வதம் செய்த இடமாதலால் தஞ்சாவூர் என்ற பெயரும் சிவபெருமான் இந்த ஊரில் தஞ்சபுரீசுவரர் என்ற பெயருடன் கோயில் கொண்டுள்ளதால் சொல்லப்படுகிறது.

தஞ்சாவூருக்கு பெருமை சேர்த்தது பெருவுடையார் கோவில்தான் இராஜாராஜ சோழனால் கட்டப்பட்டது 985 ஆம் ஆண்டு துவக்கப்பட்டு 1012 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது ஆயிரம் ஆண்டையும் கடந்து இன்னும் கம்பீரமாக நிற்கிறது தஞ்சை பெரிய கோவில். இங்குதான் கர்ப்பகிரகத்தின் மீதான கோபுரம் 216 அடிக்கு உயர்ந்து காணப்படுகிறது.