Friday 9 May 2014

என்னைக் கவர்ந்தவை

                            சமீபத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று என்னை வெகுவாக கவர்ந்தது. சன் தொலைக்காட்சியில் சாம்பியன் என்ற நிகழ்ச்சியில் அதில் பங்கு பெற்றஒருவருக்கு அம்மா, அப்பா யார் என்றே தெரியவில்லை பேர் தெரியாது என்று அவர் சொன்னவுடன் பார்வையாளராக வந்த நடிகை லெட்சுமி அவர்கள் உடனே சொன்னார் "என்னை அம்மா என்று அழைப்பா... நான் உனக்கு அம்மாவாக இருக்கிறேன்" என்று சொன்னதோடு இல்லாமல் அவரை வாஞ்சையோடு அணைத்துக்கொண்டார் அந்த நிகழ்ச்சியை
காணும் போது மனது வலிக்கத்தான் செய்கிறது பெற்றவர்கள் அந்த வலிதெரியாமல் போட்டுவிட்டு போய்விட்டார்கள் ஆனால் பலரின் கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் நிற்கும் அந்த மகனுக்கு எத்தனை வலி?

                       அதே நிகழ்ச்சி ஒன்றில் நடிகை பூஜா பார்வையாளராக வந்திருந்தார் ஒரு பெண் சிறப்பாக நடனமாடினார் அவருக்கு என்னக் கொடுப்பது என்று கை பையை துலாவினார் ஒன்றுமில்லை உடனே தன் காதில் உள்ள கம்மலை கழட்டி அந்த பெண்ணுக்கு பரிசாக அளித்தார் அந்த நிகழ்ச்சி என்னை நெகிழச்செய்து கையில் ஒன்றும் இல்லை என்றாலும் தான் போட்டு இருந்ததை உடனே கொடுத்தாரே யாருக்கு அந்த மனம் வரும்?

                     அதே போன்று சன் சிங்கர் என்ற மற்றொரு நிகழ்ச்சியில் ஜஸ்வர்யா என்ற குட்டிப் பெண் அவ்வளவு அற்புதமாக பாடலிலும், நடனத்திலும், நடிப்பிலும் எல்லோர் மனதையும் கவர்ந்து வந்தார் அவரின் அபார திறமையைக் கண்டு நடுவராக இருந்த பாடகி அனுராத ஸ்ரீராம் அவர்கள் உடனே உணர்ச்சி வசப்பட்டு சொன்னார் நீ என்ன ஆகவேண்டும் என்று நினைக்கிறாயோ அதற்கு முழு பொறுப்பேற்றுகிறேன் நான் உதவி செய்கிறேன் என்று கண்கலங்கி சொன்னார் உண்மையில் இதெல்லாம் பாராட்டுக்குரியது. உண்மையில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை பார்க்கும் போது இதை பார்ப்பவர்களுக்கும் கண்டிப்பாக உதவி செய்ய மனசு வரும்.


                        சரி இவற்றை விடுவோம் நம்மில் எத்தனை பேர் நம்முன்னே கையேந்தி நிற்கும் முதியவர்களுக்கு உதவி செய்திருக்கிறோம்? சிலர் பரிதாபபடுவார்களே தவிர உதவி செய்ய முன்வருவதில்லை "அய்யா பாவம் என்று அவசரமாக கை பையில் தேடுவார்கள் ஒரு ரூபாய் இருக்கிறதா என்று இல்லை என்றால் இல்லப்பா சில்லறை இல்லை என்று கூறி ஒரு எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தி ஏமாற்றத்தை பரிதாபமாக கொடுக்கிறோம்.

                      ஒரு சாதரண கடையில் ஒரு டீ யின் விலை 5 ரூபாய், இட்லி 2 ரூபாய், தயிர்சாதம் 25 ரூபாய், சாப்பாடு 50 ரூபாய் சில்லறை இல்லை என்றாலும் பரவாயில்லை ஒருபத்து ரூபாய் தாராளமாக கொடுக்கலாமே ஆனால் அதை கொடுக்கதான் நாம் யோசிக்கின்றோம் நாம் பரிதாபபட்டு பார்க்கும் சாலையோர பார்வையாளனாக மட்டுமே இருக்கிறோம் " எச்சில் கையால் காக்கை விரட்டாதவர்கள் கூட" இது போன்று கொடுக்கு உள்ளங்களை பார்த்து உதவி செய்ய முன்வரட்டும்.

                     கொடுப்பதிலா, பெறுவதிலா நிஜமான இன்பம் இருக்கிறது. காற்று! கால்பந்திலும் காற்று புல்லாங்குழலிலும் காற்று! கால்பந்து எல்லார்
கால்களிலும் உதைப்படுகிறது ஆனால் புல்லாங்குழல் எல்லா இதழ்களாலும்
முத்தமிடப்படுகிறது ஏன் தெரியுமா? கால்பந்து தன்னிடம் வந்த காற்றை சுயநலமாக சேமித்து வைக்கிறது, புல்லாங்குழல் அதே காற்றை அழகான இசையாக்கி சுதந்திரமாக வெளியே விடுகிறது ஆக கொடுப்பதில் உள்ள இன்பம் தான் நிஜமான இன்பம் நீங்கள் மனநிறைவோடு உறவினர்களுக்கோ அல்லது நண்பர்களுக்கோ ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கோ கொடுத்துப் பாருங்களேன் அதில் உள்ள சந்தோஷம் எதிலும் இருக்காது. அதனால் கர்ணனுக்கு கொடுத்துக்கொண்டே இருக்க தோணுச்சோ?
யோசிப்போம்.


ஸ்ரீசந்திரா

No comments:

Post a Comment